| பூ இயல் புரிகுழல்; வரிசிலை நிகர் நுதல்; ஏ இயல் கணை, பிணை, எதிர் விழி; உமையவள் மேவிய திரு உரு உடையவன்-விரைமலர் மா இயல் பொழில் வலிவலம் உறை இறையே. | 1 |
| இட்டம் அது அமர் பொடி இசைதலின், நசை பெறு பட்டு அவிர் பவள நல்மணி என அணி பெறு விட்டு ஒளிர் திரு உரு உடையவன்-விரைமலர் மட்டு அமர் பொழில் வலிவலம் உறை இறையே. | 2 |
| உரு மலி கடல் கடைவுழி உலகு அமர் உயிர் வெரு உறு வகை எழு விடம், வெளிமலை அணி கருமணி நிகர் களம் உடையவன்-மிடைதரு மரு மலி பொழில் வலிவலம் உறை இறையே. | 3 |
| அனல் நிகர் சடை அழல் அவி உற என வரு புனல் நிகழ்வதும், மதி நனை பொறி அரவமும் என நினைவொடு வரும் இதும், மெல முடிமிசை மனம் உடையவர் வலிவலம் உறை இறையே. | 4 |
| பிடி அதன் உரு உமை கொள, மிகு கரி அது வடிகொடு, தனது அடி வழிபடுமவர் இடர் கடி, கணபதி வர அருளினன்-மிகு கொடை வடிவினர் பயில் வலிவலம் உறை இறையே. | 5 |
| தரை முதல் உலகினில் உயிர் புணர் தகை மிக, விரை மலி குழல் உமையொடு விரவு அது செய்து, நரை திரை கெடு தகை அது அருளினன்-எழில் வரை திகழ் மதில் வலிவலம் உறை இறையே. | 6 |
| நலிதரு தரை வர நடை வரும் இடையவர் பொலிதரு மடவரலியர் மனை அது புகு பலி கொள வருபவன்-எழில் மிகு தொழில் வளர் வலி வரு மதில் வலிவலம் உறை இறையே. | 7 |
| இரவணன் இருபதுகரம் எழில் மலைதனின் இரவணம் நினைதர அவன் முடி பொடி செய்து, இரவணம் அமர் பெயர் அருளினன்-நகநெதி இரவு அண நிகர் வலிவலம் உறை இறையே. | 8 |
| தேன் அமர்தரு மலர் அணைபவன், வலி மிகும் ஏனம் அது ஆய் நிலம் அகழ் அரி, அடி முடி தான் அணையா உரு உடையவன்-மிடை கொடி வான் அணை மதில் வலிவலம் உறை இறையே. | 9 |
| இலை மலிதர மிகு துவர் உடையவர்களும், நிலைமையில் உணல் உடையவர்களும், நினைவது தொலை வலி நெடுமறை தொடர் வகை உருவினன்- மலை மலி மதில் வலிவலம் உறை இறையே. | 10 |
| மன்னிய வலி வல நகர் உறை இறைவனை, இன் இயல் கழுமல நகர் இறை எழில் மறை தன் இயல் கலை வல தமிழ் விரகனது உரை உன்னிய ஒருபதும் உயர்பொருள் தருமே. | 11 |