| பார் உருவாய, பிறப்பு அற வேண்டும்; பத்திமையும் பெற வேண்டும்; | பூவுலகில் தோன்றுகின்ற உடம்புகளாகிய பிறவிகள் வாராது ஒழிய வேண்டும். அதற்கு உன்னிடத்தில் வைக்கின்ற அன்பையும் நான் அடைய வேண்டும். |
| சீர் உருவாய, சிவபெருமானே, செம் கமல மலர் போல், | சிறப்பையே வடிவாக உடைய சிவபிரானே! செந்தாமரை மலர்போன்ற |
| ஆர் உருவாய, என் ஆர் அமுதே உன், அடியவர் தொகை நடுவே, | அரிய உருவத்தையுடைய எனது அரிய அமுதமானவனே! அது நிலைக்க உன்னடியார் கூட்டத்தின் நடுவில் |
| ஓர் உருவாய நின், திருவருள் காட்டி, என்னையும் உய்யக்கொண்டருளே. 1 | ஒப்பற்ற வடிவமாகிய உன்னுடைய திருவருளைக் காட்டி அடியேனையும் உய்தி பெறும்படி சேர்த்துக் கொண்டருள் வாயாக. |
| உரியேன் அல்லேன், உனக்கு அடிமை; உன்னைப் பிரிந்து இங்கு ஒருபொழுதும் | உனக்கு அடிமையா யிருப்பதற்கு உரிய தகுதியுடையேனல்லேன். எனினும் உன்னை விட்டு நீங்கி இவ்விடத்தில் ஒருகணமும் தங்கியிருக்கமாட்டேன். |
| தரியேன் நாயேன்; இன்னது என்று அறியேன்; சங்கரா! கருணையினால் | நாயனையான் அதன் தன்மை இன்னதென்று அறியமாட்டேன்.சங்கரனே! எம் தலைவனே! |
| பெரியோன் ஒருவன், கண்டு கொள்' என்று உன், பெய் கழல் அடி காட்டி, | இரக்கத்தால் பெரிய ஒப்பற்றவனாகிய நீ உன் கழலையணிந்த திருவடியைப் பார்த்துக் கொள்வாயாக என்று காட்டி |
| பிரியேன்' என்றுஎன்று, அருளிய அருளும், பொய்யோ? எங்கள் பெருமானே! 2 | உன்னைப் பிரிய மாட்டேன் என்று அருளிச் செய்த உன் திருவருளும் பொய்தானோ?. |
| என்பே உருக, நின் அருள் அளித்து, உன் இணை மலர் அடி காட்டி, | என் எலும்புகளெல்லாம் உருகும் வண்ணம் உன் திருவருளைத் தந்து உன்னுடைய இரண்டு தாமரை மலர் போன்ற திருவடியைக் காட்டி |
| முன்பே என்னை, ஆண்டு கொண்ட, முனிவா முனிவர் முழுமுதலே, | முன்னமே என்னை ஆட்கொண்ட முனிவனே! முனிவர்கட் கெல்லாம் முதற்பொருளானவனே! |
| இன்பே அருளி, எனை உருக்கி, உயிர் உண்கின்ற எம்மானே, | பேரின்பமே கொடுத் தருளி என்னை உருகுவித்து என் பசுபோதத்தை நீக்குகின்ற எங்கள் பெரியோனே! |
| நன்பே அருளாய், என் உயிர் நாதா!, நின் அருள் நாணாமே. 3 | எனது உயிர்த் தலைவனே! உன்னுடைய திருவருளால் கூசாமல் உன்னுடைய நட்பை எனக்கு அருளிச் செய்யவேண்டும். |
| பத்துஇலன் ஏனும், பணிந்திலன் ஏனும், உன் உயர்ந்த பைம் கழல் காணப் | பற்று இல்லாதவனாயினும், வணங்குதல் இல்லாதவனாயினும் உனது மேலான பசுமையான கழலையணிந்த திருவடிகளைக் காண்பற்கு |
| பித்துஇலன் ஏனும், பிதற்றிலன் ஏனும், பிறப்பு அறுப்பாய் எம் பெருமானே! | விருப்பமில்லாதவனாயினும், துதித்திலேனாயினும் என் பிறவியைப் போக்கியருள்வாயாக. |
| முத்து அனையானே!, மணி அனையானே!, முதல்வனே! முறையோ?' என்று | எம்பிரானே! முத்துப் போன்றவனே! மாணிக் கத்தைப் போன்றவனே! தலைவனே! முறையோவென்று |
| எத்தனையானும், யான் தொடர்ந்து உன்னை, இனிப் பிரிந்து ஆற்றேனே. 4 | எவ்வள வாயினும் நான் உன்னைப் பற்றித் தொடர்ந்து இனிமேல் பிரிந்திருக்கப் பொறுக்க இயலாதவனாகின்றேன். ஆதலின்! |
| காணும்அது ஒழிந்தேன், நின் திருப் பாதம்; கண்டு கண் களி கூர, | உன் திருவடியைப் பிரிந்திருத்தலால் காண்பதை ஒழிந்தேன். கண்கள் களிப்பு மிகும்படி |
| பேணும்அது ஒழிந்தேன்; பிதற்றும் அது ஒழிந்தேன்; பின்னை எம்பெருமானே, | பார்த்துப் போற்றுவது ஒழிந்தேன். வாயால் துதிப்பதையும் விட்டேன். எம் பிரானே! நிலையானவனே |
| தாணுவே அழிந்தேன்; நின் நினைந்து உருகும், தன்மை என் புன்மைகளால் | உன்னை எண்ணி உருகுகின்ற இயல்பும் என்னுடைய அற்பத் தன்மையால் தோன்றுதல் இல்லேனாயினேன். |
| காணும் அது ஒழிந்தேன்; நீ இனி வரினும், காணவும் நாணுவனே. 5 | இவற்றால் பிறகு கெட்டேன். அதனால் நீ இனிமேல் என் முன் வந்தாலும் பார்ப்பதற்கும் கூசுவேன். |
| பால் திரு நீற்று எம், பரமனை பரம், கருணையொடும் எதிர்ந்து | பால்போல வெண்மையாகிய திருநீற்றையணிந்த எம் மேலோனும், மேலான கருணையோடும் எதிரே வந்து |
| தோற்றி மெய் அடியார்க்கு, அருள் துறை அளிக்கும், சோதியை நீதி இலேன், | காணப்பட்டு உண்மை அடியவர் களுக்கு அருள் வழிநல்கும் ஒளிப்பிழம்பும், ஆகிய உன்னை அறநெறி யில்லாத யான் |
| போற்றி என் அமுதே, என நினைந்து ஏத்தி, புகழ்ந்து அழைத்து அலறி என் உள்ளே, | என் அமுதமே என்று எண்ணித் துதித்துப் போற்றி அழைத்து நின்று என் மனத்தில் ஆறுதல் அடையும்படி |
| ஆற்றுவன் ஆக, உடையவனே எனை, ஆவ' என்று அருளாயே! 6 | என்னை அடிமையாக உடையவனே! அடியேனுக்கு ஐயோ என்று இரங்கி அருள் புரிவாயாக. |
விநாயகர் அகவல் மஹா மிருத்யுஞ்ஜய மந்திரம் ஶ்ரீ ருத்ரம் நமகம் ஶ்ரீ ருத்ரம் L திருமுறை திருப்புகழ் கந்தர் அநுபூதி சுப்ரமண்ய புஜங்கம் கந்தர் அலங்காரம் சண்முக கவசம் திருமுருகாற்றுப்படை – நேரிசை வெண்பாக்கள் ஸ்ரீ சுப்பிரமணிய அஷ்டகம் வேல் வகுப்பு வேல் விருத்தம் வேல் மாறல் மயில் விருத்தம் குமாரஸ்த்தவம் கந்த புராணம் – திரு அருட்பா அபிராமி அந்தாதி சக்தி பாடல்கள் காயத்ரி மந்திரம் திவ்ய பிரபந்தம் திருவெம்பாவை திருப்பள்ளியெழுச்சி திருப்பாவை சாஸ்தா தசகம் ஹரிவராசனம் Kids Pathigams Ref