| நான்முகன் முதலா வானவர் தொழுது எழ | பிரமன் முதலாகத் தேவர்கள் யாவரும் தொழுது நிற்க |
| ஈர் அடியாலே மூவுலகு அளந்து | இரண்டு திருவடிகளாலே மூன்று உலகங்களையும் அளந்து |
| நால் திசை முனிவரும் ஐம்புலன் மலரப் | நான்கு திக்கிலுள்ள முனிவர்களும் ஐம்புலன்களும் மகிழும்படி |
| போற்றி செய் கதிர்முடித் திருநெடுமால் அன்று | வணங்குகின்ற, ஒளி பொருந்திய திருமுடியையுடைய அழகிய நெடுமால், அந்நாளில் |
| அடிமுடி அறியும் ஆதரவு அதனில் | திருவடியின் முடிவையறிய வேண்டுமென்ற விருப்பத்தால் |
| கடும் முரண் ஏனம் ஆகிமுன் கலந்து | வேகமும் வலிமையுமுடைய பன்றியாகி முன்வந்து |
| ஏழ்தலம் உருவ இடந்து பின் எய்த்து | ஏழுலகங்களும் ஊடுருவும்படி தோண்டிச் சென்று பின்னே இளைத்து |
| ஊழி முதல்வ சயசய என்று | `ஊழியை நடத்தும் முதல்வனே வெல்க வெல்க` என்று |
| வழுத்தியும் காணா மலர்அடி இணைகள் | துதித்தும் காணப் பெறாத தாமரை மலர் போலும் திருவடிகள் |
| வழுத்துதற்கு எளிதாய் வார் கடல் உலகினில் 10 | துதித்தற்கு எளிதாகி,நெடிய கடலாற் சூழப்பட்ட உலகத்தில், |
| |
| யானை முதலா எறும்பு ஈறாய | யானை முதலாக, எறும்பு இறுதியாகிய |
| ஊனம் இல் யோனியின் உள்வினை பிழைத்தும் | றைவில்லாத கருப்பைகளினின்றும் உள்ள நல்வினையால் தப்பியும், |
| மானுடப் பிறப்பினுள் மாதா உதரத்து | மனிதப் பிறப்பில் தாயின் வயிற்றில் |
| ஈனம் இல் கிருமிச் செருவினில் பிழைத்தும் | அதனை அழித்தற்குச் செய்யும் குறை வில்லாத புழுக்களின் போருக்குத் தப்பியும் |
| ஒரு மதித் தான்றியின் இருமையில் பிழைத்தும் | முதல் மாதத்தில் தான்றிக்காய் அளவுடைய கரு இரண்டாகப் பிளவுபடுவதனின்றும் தப்பியும் |
| இருமதி விளைவின் ஒருமையில் பிழைத்தும் | இரண்டாம் மாதத்தில் விளைக்கின்ற விளைவினால் உருக்கெடுவதினின்று தப்பியும் |
| மும்மதி தன்னுள் அம்மதம் பிழைத்தும் | மூன்றாம் மாதத்தில் தாயின் மதநீர்ப் பெருக்குக்குத் தப்பியும் |
| ஈர் இரு திங்களில் பேர் இருள் பிழைத்தும் | நான்காம் மாதத்தில் அம்மதநீர் நிறைவினால் உண்டாகும், பெரிய இருளுக்குத் தப்பியும் |
| அஞ்சு திங்களில் முஞ்சுதல் பிழைத்தும் | ஐந்தாம் மாதத்தில் உயிர் பெறாது இருத்தலினின்று தப்பியும் |
| ஆறு திங்களில் ஊறு அலர் பிழைத்தும் 20 | ஆறாம் மாதத்தில் கருப்பையில் தினவு மிகுதியால் உண்டாகிய துன்பத்தினின்றும் தப்பியும் |
| |
| ஏழு திங்களில் தாழ் புவி பிழைத்தும் | ஏழாவது மாதத்தில் கருப்பை தாங்காமையால் பூமியில் காயாய் விழுவதனின்று தப்பியும் |
| எட்டுத் திங்களில் கட்டமும் பிழைத்தும் | எட்டாவது மாதத்தில் வளர்ச்சி நெருக்கத்தினால் உண்டாகும் துன்பத்தினின்றும் தப்பியும் |
| ஒன்பதில் வருதரு துன்பமும் பிழைத்தும் | ஒன்பதாவது மாதத்தில் வெளிப்பட முயல்வதனால் வரும் துன்பத்தினின்று தப்பியும் |
| தக்க தசமதி தாயொடு தான்படும் | குழவி வெளிப்படுதற்குத் தகுதியாகிய பத்தாவது மாதத்தில், தாய்படுகின்றதனோடு தான்படுகின்ற, |
| துக்க சாகரத் துயரிடைப்பிழைத்தும் | கடல் போன்ற துயரத்தினின்று தப்பியும் |
| ஆண்டுகள் தோறும் அடைந்த அக்காலை | பூமியிற் பிறந்த பின்பு, வளர்ச்சியடையும் வருடங்கள் தோறும் |
| ஈண்டியும் இருத்தியும் எனைப்பல பிழைத்தும் | தாய் தந்தையர் முதலியோர் நெருக்கியும் அழுத்தியும் செய்கின்ற எத்தனையோ பல துன்பங்களில் தப்பியும் |
| காலை மலமொடு கடும்பகல் பசி நிசி | காலைப் பொழுதில் மலத்தாலும், உச்சிப் பொழுதில் பசியாலும், இராப்பொழுதில் தூக்கத்தாலும் |
| வேலை நித்திரை யாத்திரை பிழைத்தும் | ஊர்ப்பயணங்களாலும் உண்டா கின்ற துன்பங்களினின்று தப்பியும் |
| கரும்குழல் செவ்வாய் வெண்ணகைக் கார்மயில் 30 | கரிய கூந்தலையும் சிவந்த வாயினையும், வெண்மையாகிய பற்களையும், கார்காலத்து மயில் போலப் பொருந்திய |
| |
| ஒருங்கிய சாயல் நெருங்கி உள் மதர்த்துக் | சாயலையும், நெருக்கமாகி உள்ளே களிப்புக் கொண்டு |
| கச்சு அற நிமிர்ந்து கதிர்த்து முன் பணைத்து | கச்சு அறும்படி நிமிர்ந்து ஒளி பெற்று முன்னே பருத்து |
| எய்த்து இடைவருந்த எழுந்து புடைபரந்து | இடை இளைத்து வருந்தும்படி எழுந்து பக்கங்களில் பரவி |
| ஈர்க்கு இடைபோகா இளமுலை மாதர்தம் | ஈர்க்குக் குச்சியும் இடையே நுழையப் பெறாத இளங்கொங்கைகளையும் உடைய மாதருடைய |
| கூர்த்த நயனக் கொள்ளையில் பிழைத்தும் | கூர்மையாகிய கண்களின் கொள்ளைக்குத் தப்பியும் |
| பித்த உலகர் பெருந்துறைப் பரப்பினுள் | மயக்கம் கொண்ட உலகினரது பெரிய |
| மத்தக் களிறு எனும் அவாவிடைப் பிழைத்தும் | மத்தக்களிறு என்று சொல்லத் தக்க ஆசைக்குத் தப்பியும் |
| கல்வி என்னும் பல்கடல் பிழைத்தும் | கல்விஎன்கின்ற பலவாகிய கடலுக்குத் தப்பியும் |
| செல்வம் என்னும் அல்லலில் பிழைத்தும் | செல்வமென்கின்ற துன்பத்தினின்று தப்பியும் |
| நல்குரவு என்னும் தொல்விடம் பிழைத்தும் 40 | வறுமை என்கின்ற பழமையாகிய விடத்தினின்று தப்பியும் |
| |
| புல்வரம்பு ஆய பலதுறை பிழைத்தும் | சிறிய எல்லைகளையுடைய பல வகைப்பட்ட முயற்சிகளில் தப்பியும் |
| தெய்வம் என்பதோர் சித்தம் உண்டாகி | தெய்வம் உண்டு என்பதாகிய ஒரு நினைப்பு உண்டாகி |
| முனிவு இலாததோர் பொருள் அது கருதலும் | வெறுப்பில்லாததாகிய ஒரு பொருளை நாடுதலும் |
| ஆறு கோடி மாயா சத்திகள் | ஆறுகோடியெனத் தக்கனவாய் மயக்கம் செய்யவல்ல சடவுலக ஆற்றல்கள் |
| வேறு வேறு தம் மாயைகள் தொடங்கின | வேறு வேறாகிய தம் மாயைகளைச் செய்யத் தொடங்கினவாகவும் |
| ஆத்தம் ஆனார் அயலவர் கூடி | அயலா ராயினோரும் கடவுள் இல்லையென்று பொய் வழக்குப் |
| நாத்திகம் பேசி நாத்தழும்பு ஏறினர் | பேசி நாவில் தழும்பேறப் பெற்றனர் |
| சுற்றம் என்னும் தொல்பசுக் குழாங்கள் | உறவினர் என்கின்ற பசுக்கூட்டங்கள் பின் |
| பற்றி அழைத்துப் பதறினர் பெருகவும் | பற்றி அழைத்துப் பதறிப் பெருகவும் |
| விரதமே பரம் ஆக வேதியரும் 50 | மறையோரும், விரதத்தையே மேன்மையான |
| |
| சரதம் ஆகவே சாத்திரம் காட்டினர் | சாதனம் என்று தம் கொள்கை உண்மையாகும் படி நூற்பிரமாணங்களைக் காட்டினார்களாகவும் |
| சமய வாதிகள் தத்தம் மதங்களே | சமயவாதிகள் எல்லாம் தம்தம் மதங்களே |
| அமைவதாக அரற்றி மலைந்தனர் | ஏற்புடைய மதங்களாகும் எனச் சொல்லி ஆர வாரித்துப் பூசலிட்டார்களாகவும் |
| மிண்டிய மாயா வாதம் என்னும் | உறுதியான மாயாவாதம் என்கிற |
| சண்ட மாருதம் சுழித்து அடித்துத் ஆஅர்த்து | பெருங்காற்றானது சுழன்று வீசி முழங்கவும் |
| உலோகாயதனெனும் ஒண் திறற் பாம்பின் | உலோகாயத மதம் என்கிற, ஒள்ளிய வலிமையுடைய பாம்பினது |
| கலா பேதத்த கடுவிடம் எய்தி | கலை வேறுபாடு களையுடைய கொடிய நஞ்சு வந்து சேர்ந்து |
| அதில் பெருமாயை எனைப்பல சூழவும் | அதிலுள்ள பெருஞ் சூழ்ச்சிகள் எத்தனையோ பலவாகச் சுற்றித் தொடரவும், |
| தப்பாமே தாம் பிடித்தது சலியாத் | முற்கூறிய அவற்றால் வழுவாது தாம் பிடித்த கொள்கையை விட்டு விடாமல் |
| தழலது கண்ட மெழுகு அது போலத் 60 | நெருப்பினிற் பட்ட மெழுகுபோல |
| |
| தொழுது உளம் உருகி அழுது உடல்கம்பித்து | வணங்கி மனம் உருகி, அழுது உடல் நடுக்கமடைந்து |
| ஆடியும் அலறியும் பாடியும் பரவியும் | ஆடுதல் செய்தும், அலறுதல் செய்தும், பாடுதல் செய்தும், வழிபட்டும் |
| கொடிறும் பேதையும் கொண்டது விடாதெனும் | குறடும் மூடனும் தாம் பிடித்ததை விடா என்கிற |
| படியே ஆகி நல் இடைஅறா அன்பின் | முறைமையேயாகி நல்ல, இடையறாத கடவுள் பத்தியில் |
| பசுமரத்து ஆணி அறைந்தால் போலக் | பச்சை மரத்தில் அடித்த ஆணி திண்மையாய்ப் பற்றி நிற்பது போல |
| கசிவது பெருகிக் கடல் என மறுகி | உறைத்து நின்று உருக்கம் மிகுந்து கடல் அலைபோல |
| அகம் குழைந்து அனுகுலமாய் மெய் விதிர்த்துச் | அலைவுற்று மனம் வாடி, அதற்கு ஏற்ப உடல் அசைவுற்று |
| சகம் பேய் என்று தம்மைச் சிரிப்ப | உலகவர் பேய் என்று தம்மை இகழ்ந்து சிரிக்க |
| நாண் அது ஒழிந்து நாடவர் பழித்துரை | வெட்கமென்பது தவிர்ந்து, நாட்டில் உள்ளவர் கூறும் |
| பூண் அது ஆகக் கோணுதல் இன்றிச் 70 | குறைச்சொற்களை அணியாக ஏற்று, மனம் கோணுதல் இல்லாமல் |
| |
| சதுர் இழந்து அறிமால் கொண்டு சாரும் | தமது திறமை ஒழிந்து, சிவஞானம் என்னும் உணர்வினால் |
| கதியது பரம அதிசயம் ஆகக் | அடையப் பெறுகின்ற மேலான வியப்பாகக் கருதி |
| கற்றா மனம் எனக் கதறியும் பதறியும் | கன்றினை உடைய பசுவின் மனம் போல அலறியும் நடுங்கியும் |
| மற்று ஓர் தெய்வம் கனவிலும் நினையாது | வேறொரு தெய்வத்தைக் கனவிலும் நினையாமல் |
| அருபரத்து ஒருவன் அவனியில் வந்து | அரிய மேலான ஒருவன் பூமியில் வந்து |
| குருபரன் ஆகி அருளிய பெருமையைச் | குருமூர்த்தியாகி அருள் செய்த பெருமையை |
| சிறுமை என்று இகழாதே திருவடி இணையைப் | எளிமையாக எண்ணி அசட்டை செய்யாது திருவடிகள் இரண்டையும் |
| பிறிவினை அறியா நிழல் அது போல | உருவைவிட்டு அகலாத நிழலைப் போல |
| முன் பின்னாகி முனியாது அத்திசை | வெறுக்காமல், முன்பின்னும் நீங்காது நின்று அந்தத் திசை |
| என்பு நைந்து உருகி நெக்கு நெக்கு ஏங்கி 80 | நோக்கி நினைந்து எலும்பு மெலிவுற்று உருக, மிகக் கனிவுற்று இரங்கி |
| |
| அன்பு எனும் ஆறு கரை அது புரள | பத்தியென்னும் நதியானது கரை புரண்டு ஒட |
| நன்புலன் ஒன்றி நாத என்று அரற்றி | நல்ல புலனறிவு ஒருமைப்பட்டு, `நாதனே!` என்று கூவி |
| உரை தடுமாறி உரோமம் சிலிர்ப்பக் | அழைத்துச் சொற்கள் குழறி, மயிர்சிலிர்க்க |
| கரமலர் மொட்டித்து இருதயம் மலரக் | அழைத்துச் சொற்கள் குழறி, மயிர்சிலிர்க்க |
| கண்களி கூர நுண் துளி அரும்பச் | கண்கள் களிப்பு மிக நுண்ணிய துளிகள் அரும்பத் |
| சாயா அன்பினை நாள்தொறும் தழைப்பவர் | தளராத பேரன்பினை, தினந்தோறும், வளர்ப்பவர்களுக்குத் |
| தாயே ஆகி வளர்த்தனை போற்றி | தாயாகியே அவர்களை வளர்த்தவனே! வணக்கம். |
| மெய் தரு வேதியன் ஆகி வினைகெடக் | மெய்யுணர்வை நல்கும் மறையோனாகி, வினைகள் நீங்க |
| கைதரவல்ல கடவுள் போற்றி | கைகொடுத்துக் காப்பாற்ற வல்ல கடவுளே! வணக்கம் |
| ஆடக மதுரை அரசே போற்றி 90 | பொன்மயமா யிருக்கிற மதுரைக்கு அரசனே! வணக்கம். |
| |
| கூடல் இலங்கு குருமணி போற்றி | கூடற்பதியில் விளங்கு கின்ற நன்னிற மாணிக்கமே! வணக்கம். |
| தென் தில்லை மன்றினுள் ஆடி போற்றி | தென்தில்லையம்பலத்தில் ஆடுவோனே! வணக்கம். |
| இன்று எனக்கு ஆர் அமுது ஆனாய் போற்றி | இன்று எனக்கு அரிய அமிர்தமாயினவனே! வணக்கம். |
| மூவா நான்மறை முதல்வா போற்றி | கெடாத நான்கு வேதங்களுக்கும் முதல்வனே! வணக்கம். |
| சேவார் வெல்கொடிச் சிவனே போற்றி | இடபம் பொருந்திய வெற்றிக் கொடியை உடைய சிவபிரானே! வணக்கம். |
| மின் ஆர் உருவ விகிர்தா போற்றி | மின்னல் ஒளி பொருந்திய பல அழகிய வேறுவேறு உருவங்களை உடையவனே! வணக்கம். |
| கல் நார் உரித்த கனியே போற்றி | கல்லில் நார் உரித்தது போல என் மனத்தை இளகச் செய்த கனியே! வணக்கம். |
| காவாய் கனகக் குன்றே போற்றி | பொன்மலை போன்றவனே! காத்தருள்வாய். வணக்கம். |
| ஆ ஆ என்தனக்கு அருளாய் போற்றி | ஐயோ! எனக்கருள் செய்வாய். நினக்கு வணக்கங்கள். |
| படைப்பாய் காப்பாய் துடைப்பாய் போற்றி 100 | எல்லா உலகங்களையும் படைப் பவனே! காப்பவனே! ஒடுக்குபவனே! வணக்கம். |
| |
| இடரைக் களையும் எந்தாய் போற்றி | பிறவித்துன்பத்தை நீக்கி அருள் புரிகின்ற எம் தந்தையே! வணக்கம். |
| ஈச போற்றி இறைவ போற்றி | ஆண்டவனே! வணக்கம். எங்கும் நிறைந்தவனே! வணக்கம். |
| தேசப் பளிங்கின் திரளே போற்றி | ஒளியை வீசுகின்ற படிகத்தின் திரட்சியே! வணக்கம். |
| அரைசே போற்றி அமுதே போற்றி | தலைவனே! வணக்கம். சாவாமையைத் தரும் மருந்தான வனே! வணக்கம். |
| விரை சேர் சரண விகிர்தா போற்றி | நறுமணம் பொருந்திய திருவடியையுடைய நீதியாளனே! வணக்கம். |
| வேதி போற்றி விமலா போற்றி | வேதத்தை உடையவனே! வணக்கம். குற்ற மற்றவனே! வணக்கம். |
| ஆதி போற்றி அறிவே போற்றி | முதல்வனே! வணக்கம். அறிவாய் இருப் பவனே! வணக்கம், |
| கதியே போற்றி கனியே போற்றி | வீட்டு நெறியானவனே! வணக்கம். கனியின் சுவை போன்றவனே! வணக்கம். |
| நதி சேர் செஞ்சடை நம்பா போற்றி | கங்கையாறு தங்கிய சிவந்த சடையை யுடைய நம்பனே! வணக்கம். |
| உடையாய் போற்றி உணர்வே போற்றி 110 | எல்லாப் பொருள்களையும் உடைய வனே! வணக்கம். உயிர்களின் உணர்விற்கு உணர்வாய் இருப்பவனே! வணக்கம். |
| |
| கடையேன் அடிமை கண்டாய் போற்றி | கடையேனுடைய அடிமையைக் கடைக்கணித்து ஏற்றுக் கொண்டவனே! வணக்கம் |
| ஐயா போற்றி அணுவே போற்றி | பெரியோனே! வணக்கம். நுண்ணியனே! வணக்கம். |
| சைவா போற்றி தலைவா போற்றி | சைவனே! வணக்கம், தலைவனே! வணக்கம், |
| குறியே போற்றி குணமே போற்றி | அனற் பிழம்பாகிய இலிங்கவடிவினனே! வணக்கம். எண்குணங்கள் உடையவனே! வணக்கம் |
| நெறியே போற்றி நினைவே போற்றி | நல்வழியானவனே! வணக்கம். உயிர்களின் நினைவில் கலந்துள்ளவனே! |
| வானோர்க்கு அரிய மருந்தே போற்றி | தேவர்களுக்கும் அரிதாகிய மருந்தானவனே! வணக்கம். |
| ஏனோர்க்கு எளிய இறைவா போற்றி | மற்றையோர்க்கு எளிமையான இறைவனே! வணக்கம். |
| மூவேழ் சுற்றம் முரண் உறு நரகிடை | இருபத்தொரு தலை முறையில் வருகின்ற சுற்றத்தார் வலிய நரகத்தில் |
| ஆழாமே அருள் அரசே போற்றி | ஆழ்ந்து போகாமல் அருள் செய்கின்ற அரசனே! வணக்கம். |
| தோழா போற்றி துணைவா போற்றி 120 | தோழனே! வணக்கம். துணைபுரிபவனே! வணக்கம். |
| |
| வாழ்வே போற்றி என் வைப்பே போற்றி | என்னுடைய வாழ்வானவனே! வணக்கம். என் நிதியானவனே! வணக்கம். |
| முத்தா போற்றி முதல்வா போற்றி | இயல்பாகவே பாசங்கள் இல்லாதவனே! வணக்கம். தலைவனே! வணக்கம். |
| அத்தா போற்றி அரனே போற்றி | அப்பனே! வணக்கம். பாசத்தை அழிப்பவனே! வணக்கம். |
| உரைஉணர்வு இறந்த ஒருவ போற்றி | சொல்லையும் அறிவையும் கடந்த ஒப்பற்றவனே! வணக்கம். |
| விரிகடல் உலகின் விளைவே போற்றி | விரிந்த கடல் சூழ்ந்த உலக வாழ்வின் பயனே! வணக்கம். |
| அருமையில் எளிய அழகே போற்றி | அருமையாய் இருந்தும் எளிமையாய் வந்தருளும் அழகனே! வணக்கம். |
| கரு முகிலாகிய கண்ணே போற்றி | கார்மேகம் போல அருள் புரிகின்ற கண் போன்றவனே! வணக்கம். |
| மன்னிய திருவருள் மலையே போற்றி | . நிலைபெற்ற பெருங்கருணை மலையே! வணக்கம். |
| என்னையும் ஒருவ னாக்கி இருங்கழல் | என்னையும் ஓர் அடியவனாக்கிப் பெருமையாகிய திருவடியை |
| சென்னியில் வைத்த சேவக போற்றி 130 | என் தலையில் வைத்த வீரனே! வணக்கம். |
| |
| தொழுதகை துன்பந் துடைப்பாய் போற்றி | வணங்கிய கையினரின் துன்பங்களை நீக்குவோனே! வணக்கம். |
| அழிவிலா ஆனந்த வாரி போற்றி | அழிவில்லாத இன்பக்கடலே! வணக்கம். |
| அழிவதும் ஆவதும் கடந்தாய் போற்றி | ஒடுக்கமும் தோற்றமும் கடந்தவனே! வணக்கம். |
| முழுவதும் இறந்த முதல்வா போற்றி | எல்லாம் கடந்த முதல்வனே! வணக்கம். |
| மான்நேர் நோக்கி மணாளா போற்றி | மானை நிகர்த்த நோக்கத்தையுடைய உமா தேவியின் மணவாளனே! வணக்கம். |
| வானகத்து அமரர் தாயே போற்றி | விண்ணுலகத்திலுள்ள தேவர்களுக்குத் தாய் போன்றவனே! வணக்கம். |
| பாரிடை ஐந்தாய்ப் பரந்தாய் போற்றி | பூமியில் ஐந்து தன்மைகளாய்ப் பரவியிருப்பவனே! வணக்கம். |
| நீரிடை நான்காய் நிகழ்ந்தாய் போற்றி | நீரில் நான்கு தன்மைகளாய் நிறைந்து இருப்பவனே! வணக்கம். |
| தீயிடை மூன்றாய்த் திகழ்ந்தாய் போற்றி | நெருப்பில் மூன்று தன்மைகளாய்த் தெரிபவனே! வணக்கம். |
| வளியிடை இரண்டாய் மகிழ்ந்தாய் போற்றி 140 | காற்றில் இரண்டு தன்மைகளாய் மகிழ்ந்து இருப்பவனே! வணக்கம். |
| |
| வெளியிடை ஒன்றாய் விளைந்தாய் போற்றி | ஆகாயத்தில் ஒரு தன்மையாய்த் தோன்றியவனே! வணக்கம். |
| அளிபவர் உள்ளத்து அமுதே போற்றி | கனிபவருடைய மனத்தில் அமுதமாய் இருப்பவனே! வணக்கம். |
| கனவிலும் தேவர்க்கு அரியாய் போற்றி | கனவிலும் தேவர்கட்கு அருமையானவனே! வணக்கம். |
| நனவிலும் நாயேற்கு அருளினை போற்றி | நாய் போன்ற எனக்கு விழிப்பிலும் அருள் செய்தவனே! வணக்கம். |
| இடைமருது உறையும் எந்தாய் போற்றி | திருவிடை மருதூரில் வீற்றிருக்கும் எம் அப்பனே! வணக்கம். |
| சடையிடைக் கங்கை தரித்தாய் போற்றி | சடையில் கங்கையைத் தாங்கியவனே! வணக்கம். |
| ஆரூர் அமர்ந்த அரசே போற்றி | திருவாரூரில் தங்கியருளிய தலைவனே! வணக்கம். |
| சீர் ஆர் திருவையாறா போற்றி | சிறப்புப் பொருந்திய திருவையாற்றில் உள்ளவனே! வணக்கம். |
| அண்ணாமலை எம் அண்ணா போற்றி | அண்ணாமலையிலுள்ள எம்மேலோனே! வணக்கம். |
| கண் ஆர் அமுதக் கடலே போற்றி 150 | கண்ணால் நுகரப்படும் அமுதக் கடலாய் உள்ளவனே! வணக்கம். |
| |
| ஏகம்பத்து உறை எந்தாய் போற்றி | திருவேகம்பத்தில் வாழ்கின்ற எந்தையே! வணக்கம் |
| பாகம் பெண் உரு ஆனாய் போற்றி | அங்கு ஒரு பாகம் பெண்ணுருவாகியவனே! வணக்கம் |
| பராய்த் துறை மேவிய பரனே போற்றி | திருப்பராய்த் துறையில் பொருந்திய மேலோனே! வணக்கம். |
| சிராப்பள்ளி மேவிய சிவனே போற்றி | திருச்சிராப்பள்ளியில் எழுந்தருளிய சிவபிரானே! வணக்கம். |
| மற்று ஓர் பற்று இங்கு அறியேன் போற்றி | இவ்விடத்து உன்னையன்றி மற்றொருபற்றையும் யான் அறிந்திலேன் ஆதலின் வணக்கம். |
| குற்றாலத்து எம் கூத்தா போற்றி | திருக்குற்றாலத்தில் எழுந்தருளியுள்ள எம் கூத்தனே! வணக்கம். |
| கோகழி மேவிய கோவே போற்றி | திருப் பெருந்துறையில் பொருந்திய இறைவனே! வணக்கம். |
| ஈங்கோய் மலை எம் எந்தாய் போற்றி | திரு ஈங்கோய் மலையில் வாழ்கின்ற எம் தந்தையே! வணக்கம். |
| பாங்கு ஆர் பழனத்து அழகா போற்றி | வனப்பு நிறைந்த திருப்பழனத்தில் உள்ள அழகனே! வணக்கம். |
| கடம்பூர் மேவிய விடங்கா போற்றி 160 | திருக்கடம்பூரில் எழுந்தருளிய சுயம்புவே! வணக்கம். |
| |
| அடைந்தவர்க்கு அருளும் அப்பா போற்றி | உன்னை அடுத்தவர்க்கு அருள் செய்கின்ற அப்பனே! வணக்கம். |
| இத்தி தன்னின் கீழ் இருமூவர்க்கு | கல்லால மரத்தின் கீழ் இயக்கியர் அறுவருக்கும், |
| அத்திக்கு அருளிய அரசே போற்றி | வெள்ளானைக்கும் அருள் செய்த அரசனே! வணக்கம். |
| தென்னாடுடைய சிவனே போற்றி | மற்றும்பல தலங்கள் உள்ள தென்னாடுடைய சிவபிரானே! வணக்கம். |
| எந்நாட்டவர்க்கும் இறைவா போற்றி | வேறு பல நாட்டவர்களுக்கும் வழிபடு தெய்வமானவனே! வணக்கம். |
| ஏனக் குருளைக்கு அருளினை போற்றி | பன்றிக்குட்டிகளுக்குக் கருணை காட்டி அருளியவனே! வணக்கம். |
| மானக் கயிலை மலையாய் போற்றி | பெரிய கயிலாயமலையில் இருப்பவனே! வணக்கம். |
| அருளிட வேண்டும் அம்மான் போற்றி | அம்மானே! அருள் செய்ய வேண்டும்.வணக்கம். |
| இருள் கெட அருளும் இறைவா போற்றி | அஞ்ஞான இருள் அழியும்படி அருள் செய்கின்ற இறைவனே! வணக்கம். |
| தளர்ந்தேன் அடியேன் தமியேன் போற்றி 170 | அடியேன் துணையற்றவனாய்த் தளர்ச்சி அடைந்தேன்; வணக்கம். |
| |
| களம் கொளக் கருத அருளாய் போற்றி | நிலையான இடத்தைப் பெற எண்ணும்படி அருள்புரிவாய், வணக்கம். |
| அஞ்சேல் என்று இங்கு அருளாய் போற்றி | அஞ்சாதே என்று இப்பொழுது எனக்கு அருள் செய்ய வேண்டும்; வணக்கம். |
| நஞ்சே அமுதா நயந்தாய் போற்றி | நஞ்சையே அமுதமாக விரும்பினவனே! வணக்கம், |
| அத்தா போற்றி ஐயா போற்றி | அப்பனே! வணக்கம், குருவே! வணக்கம். |
| நித்தா போற்றி நிமலா போற்றி | என்றும் உள்ளவனே! வணக்கம். குற்றம் அற்றவனே! வணக்கம். |
| பத்தா போற்றி பவனே போற்றி | தலைவனே! வணக்கம். எவற்றுக்கும் பிறப்பிடமானவனே! வணக்கம். |
| பெரியாய் போற்றி பிரானே போற்றி | பெரியவனே! வணக்கம். வள்ளலே! வணக்கம் |
| அரியாய் போற்றி அமலா போற்றி | அரியவனே! வணக்கம். பாசம் இல்லாதவனே! வணக்கம். |
| மறையோர் கோல நெறியே போற்றி | அந்தணர் கோலத்தோடு வந்து அருள் புரிந்த நீதியானவனே! வணக்கம். |
| முறையோ தரியேன் முதல்வா போற்றி 180 | முறையோ பொறுக்க மாட்டேன். முதல்வனே! வணக்கம். |
| |
| உறவே போற்றி உயிரே போற்றி | சுற்றமானவனே! வணக்கம். உயிர்க்கு உயிராய் இருப்பவனே! வணக்கம். |
| சிறவே போற்றி சிவமே போற்றி | சிறந்த பொருளான வனே! வணக்கம். மங்கலப் பொருளானவனே! வணக்கம். |
| மஞ்சா போற்றி மணாளா போற்றி | ஆற்ற லுடையவனே! வணக்கம். அழகுடையவனே! வணக்கம். |
| பஞ்சேர் அடியாள் பங்கா போற்றி | செம்பஞ்சுக் குழம்பு பூசிய அழகிய பாதங்களை உடைய உமாதேவி பாகனே! வணக்கம். |
| அலந்தேன் நாயேன் அடியேன் போற்றி | நாயினேன் வருத்த முற்றேன். நின் அடியவன் நினக்கு வணக்கம். |
| இலங்கு சுடர் எம் ஈசா போற்றி | விளங்குகின்ற ஒளியையுடைய எம் ஆண்டவனே! வணக்கம். |
| கவைத்தலை மேவிய கண்ணே போற்றி | கவைத்தலை என்னும் திருப்பதியில் விரும்பி எழுந்தருளிய கண் போன்றவனே! வணக்கம். |
| குவைப்பதி மலிந்த கோவே போற்றி | குவைப்பதி என்னும் ஊரிலே மகிழ்ந்து இருந்த இறைவனே! வணக்கம். |
| மலை நாடு உடைய மன்னே போற்றி | மலைநாட்டை உடைய மன்னனே! வணக்கம். |
| கலை ஆர் அரிகேசரியாய் போற்றி 190 | கல்வி மிகுந்த அரிகேசரி யென்னும் ஊரினை உடையாய்! வணக்கம். |
| |
| திருக்கழுக் குன்றில் செல்வா போற்றி | ருக்கழுக்குன்றிலுள்ள செல்வனே! வணக்கம். |
| பொருப்பு அமர் பூவணத்து அரனே போற்றி | கயிலை மலையில் வீற்றிருக்கும், திருப்பூவணத் திலுள்ள பெருமானே! வணக்கம். |
| அருவமும் உருவமும் ஆனாய் போற்றி | அருவம் உருவம் என்னும் திருமேனிகளைக் கொண்டவனே! வணக்கம். |
| மருவிய கருணை மலையே போற்றி | என்னிடத்தில் வந்து பொருந்திய அருள் மலையே! வணக்கம். |
| துரியமும் இறந்த சுடரே போற்றி | சாக்கிரம் முதலிய நான்கு நிலையும் கடந்த பேரறிவே! வணக்கம். |
| தெரிவு அரிது ஆகிய தெளிவே போற்றி | அறிதற்கு அருமையாகிய தெளிவே! வணக்கம். |
| தோளா முத்தச் சுடரே போற்றி | துளைக்கப் படாத தூய முகத்தின் சோதியே! வணக்கம். |
| ஆள் ஆனவர்கட்கு அன்பா போற்றி | அடிமையானவர்க்கு அன்பனே! வணக்கம் |
| ஆரா அமுதே அருளே போற்றி | தெவிட்டாத அமுதமே! திருவருளே! வணக்கம். |
| பேர் ஆயிரம் உடைப் பெம்மான் போற்றி 200 | ஆயிரம் திருப்பெயர்களை உடைய பெருமானே! வணக்கம். |
| |
| தாளி அறுகின் தாராய் போற்றி | நீண்ட தாளினையுடைய அறுகம்புல் கட்டிய மாலை அணிந் தவனே! வணக்கம். |
| நீள் ஒளி ஆகிய நிருத்தா போற்றி | பேரொளி வடிவாகிய கூத்தப் பெருமானே! வணக்கம். |
| சந்தனச் சாந்தின் சுந்தர போற்றி | சந்தனக் குழம்பை அணிந்த அழகனே! வணக்கம். |
| சிந்தனைக்கு அரிய சிவமே போற்றி | நினைத்தற்கரிய சிவமே! வணக்கம். |
| மந்திர மாமலை மேயாய் போற்றி | மந்திர நூல் வெளிப்பட்ட பெரிய மகேந்திர மலையில் வீற்றிருந்தவனே! வணக்கம். |
| எந்தமை உய்யக் கொள்வாய் போற்றி | எங்களை உய்யும்படி ஆட்கொள்வோனே! வணக்கம். |
| புலிமுலை புல் வாய்க்கு அருளினை போற்றி | புலியின் பாலை மானுக்கு ஊட்டுமாறு அருளினவனே! வணக்கம். |
| அலைகடல் மீமிசை நடந்தாய் போற்றி | அசையாநின்ற கடலின் மேல் நடந்தவனே! வணக்கம். |
| கருங் குருவிக்கு அன்று அருளினை போற்றி | கரிக் குருவிக்கு அன்று அருள் செய்தவனே! வணக்கம். |
| இரும் புலன் புலர இசைந்தனை போற்றி 210 | வலிய ஐம்புல வேட்கைகள் அற்றொழியும் உள்ளம் பொருந்தி அருளினவனே! வணக்கம். |
| |
| படி உறப் பயின்ற பாவக போற்றி | நிலத்தின் கண் பொருந்தப் பழகிய பல்வகைத் தோற்ற முடையவனே! வணக்கம். |
| அடியொடு நடு ஈறு ஆனாய் போற்றி | உலகத்திற்கு எல்லாம் முதலும் நடுவும் முடிவுமானவனே! வணக்கம். |
| நரகொடு சுவர்க்கம் நானிலம் புகாமல் | நாகம், விண்ணுலகம், நிலவுலகம் என்ற மூவிடத்தும் புகாதபடி |
| பரகதி பாண்டியற்கு அருளினை போற்றி | பாண்டியனுக்கு மேலான வீட்டுலகை நல்கி அருளியவனே! வணக்கம். |
| ஒழிவற நிறைந்த ஒருவ போற்றி | எங்கும் நீக்கமற நிறைந்த ஒருவனே! வணக்கம். |
| செழு மலர்ச் சிவபுரத்து அரசே போற்றி | செழுமை மிக்க மலர் நிறைந்த திருப்பெருந்துறைத் தலைவனே! வணக்கம். |
| கழு நீர் மாலைக் கடவுள் போற்றி | செங்கழுநீர் மாலையை அணிந்த கடவுளே! வணக்கம். |
| தொழுவார் மையல் துணிப்பாய் போற்றி | வணங்குவோருடைய மயக்கத்தை அறுப்பவனே! வணக்கம். |
| பிழைப்பு வாய்ப்பு ஒன்று அறியா நாயேன் | தவறு யாது? பொருத்தம் யாது? என்று அறியாத நாயினேன் |
| குழைத்த சொல்மாலை கொண்டருள் போற்றி 220 | குழைந்து சொன்ன சொல் மாலையைக் கொண்டருள வேண்டும்; வணக்கம். |
| |
| புரம்பல எரித்த புராண போற்றி | மூன்றுபுரங்களை எரித்த பழையோனே! வணக்கம். |
| பரம் பரஞ்சோதிப் பரனே போற்றி | மேலான ஒளியை உடைய மேலோனே! வணக்கம். |
| போற்றி போற்றி புயங்கப் பெருமான் | பாம்பை அணிந்த பெரியோனே! வணக்கம். |
| போற்றி போற்றி புராண காரண | பழமையானவனே! எல்லாவற்றிற்கும் மூல காரணனே! வணக்கம். வணக்கம். |
| போற்றி போற்றி சய சய போற்றி. 225 | வெற்றியுண்டாக வணக்கம்! வணக்கம்!. |