வட்டனை மதிசூடியை - 5.4
வட்டனை(ம்), மதிசூடியை, வானவர்-
சிட்டனை, திரு அண்ணாமலையனை,
இட்டனை, இகழ்ந்தார் புரம்மூன்றையும்
அட்டனை,-அடியேன் மறந்து உய்வனோ? [1]
வானனை(ம்), மதி சூடிய மைந்தனை,
தேனனை, திரு அண்ணாமலையனை,
ஏனனை, இகழ்ந்தார் புரம்மூன்று எய்த
ஆனனை,-அடியேன் மறந்து உய்வனோ? [2]
மத்தனை(ம்), மதயானை உரித்த எம்
சித்தனை, திரு அண்ணாமலையனை,
முத்தனை(ம்), முனிந்தார் புரம்மூன்று எய்த
அத்தனை,-அடியேன் மறந்து உய்வனோ? [3]
காற்றனை, கலக்கும் வினை போய் அறத்
தேற்றனை, திரு அண்ணாமலையனை,
கூற்றனை, கொடியார் புரம்மூன்று எய்த
ஆற்றனை,-அடியேன் மறந்து உய்வனோ? [4]
மின்னனை, வினை தீர்த்து எனை ஆட்கொண்ட
தென்னனை, திரு அண்ணாமலையனை,
என்னனை, இகழ்ந்தார் புரம்மூன்று எய்த
அன்னனை,-அடியேன் மறந்து உய்வனோ? [5]
மன்றனை(ம்), மதியாதவன் வேள்விமேல்
சென்றனை, திரு அண்ணாமலையனை,
வென்றனை, வெகுண்டார் புரம்மூன்றையும்
கொன்றனை, கொடியேன் மறந்து உய்வனோ? [6]
வீரனை, விடம் உண்டனை, விண்ணவர்-
தீரனை, திரு அண்ணாமலையனை,
ஊரனை, உணரார் புரம் மூன்று எய்த
ஆரனை,-அடியேன் மறந்து உய்வனோ? [7]
கருவினை, கடல்வாய் விடம் உண்ட எம்
திருவினை, திரு அண்ணாமலையனை,
உருவினை, உணரார் புரம் மூன்று எய்த
அருவினை,-அடியேன் மறந்து உய்வனோ? [8]
அருத்தனை, அரவு ஐந்தலை நாகத்தைத்
திருத்தனை, திரு அண்ணாமலையனை,
கருத்தனை, கடியார் புரம்மூன்று எய்த
வருத்தனை,-அடியேன் மறந்து உய்வனோ? [9]
அரக்கனை அலற(வ்) விரல் ஊன்றிய
திருத்தனை, திரு அண்ணாமலையனை,
இரக்கம் ஆய் என் உடல் உறு நோய்களைத்
துரக்கனை,-தொண்டனேன் மறந்து உய்வனோ? [10]
– திருச்சிற்றம்பலம் –